முக்கியச் செய்திகள்

அறிவியல் பயிற்சி: அகஸ்தியா நிறுவனத்துக்கான அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய பாமக வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சிகளை வழங்க அகஸ்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பு ஆண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; அதன் பணிகளை விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மையம், நடமாடும் அறிவியல் ஆய்வகம், இளம் பயிற்றுனர் தலைவர் திட்டம் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த 5 பயிற்சித் திட்டங்களை நேரடியாக வகுப்புகளுக்கு சென்று நடத்த அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். கடந்த ஆண்டில் 18 மாவட்டங்களில் மட்டும் இந்த பயிற்சிகளை இணைய வழியில் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அறிவியல் வளாகம் அமைக்கப்படுவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு பள்ளிகளில் அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளையின் ஆதிக்கம் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

அறிவியல் மையம், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பயிற்சிகள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அத்தகைய பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் எத்தகைய பின்னணி கொண்டது என்பதுதான் முக்கியம்.

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதுடன், தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கையை வகுப்பதற்கு குழுவை அமைத்துள்ளது. இத்தகைய சூழலில், புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் நிறுவனத்தைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் முடிவை கடந்த ஆண்டு எடுத்ததுடன், நடப்பாண்டில் அந்த நிறுவனத்தின் சேவைகளையும் விரிவுபடுத்த திமுக அரசு அனுமதித்திருக்கிறது.

அகஸ்தியா அறக்கட்டளை வழங்கும் அறிவியல் சார்ந்த பயிற்சிகள் உலகில் வேறு எங்கும் கிடைக்காதவை அல்ல. அத்தகைய பயிற்சிகளை தமிழக அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கொண்டு வழங்க முடியும். எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சிகளை வழங்க அகஸ்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசின் கல்வித்துறை வல்லுனர்களைக் கொண்டு இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்!

Halley Karthik

டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

Saravana Kumar

அடக் கொடுமையே.. முன்னாள் காதலியை பார்க்கச் சென்றவருக்கு இப்படி ஒரு சிக்கல்!

Gayathri Venkatesan