கோவை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள் ள தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்து வந்தார். இயற்பியல் வகுப்பு எடுத்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். மாணவியின் பெற்றோர் எளிய பின்னணியை கொண்டவர்கள் என்பதால், அதை சாதகமாக பயன்படுத்திகொண்ட ஆசிரியர் மிதுன், மாணவியிடம் தொடர்ந்து தனது கொடூர முகத்தை காட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மனஉளைச்சலுக்குள்ளான மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த மாணவி, அந்த பள்ளியில் இருந்து டிசி வாங்கிக்கொண்டு அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில்தான், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் அந்த மாணவி. உயிரை மாய்த்துக் கொள்ளும் முன் மாணவி எழுதிய கடிதத்தில், யாரையும் சும்மாவிடக் கூடாது என்று சிலர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி உயிரிக்கு காரணமான ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, மாணவியின் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் . பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் தலைமறைவானார். இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.








