டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இன்றிரவு மோதுகின்றன. இந்தப் போட்டியிலும் டாஸ்தான் வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கும் என்கிறார்கள்.
ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரசு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இதில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் நுழைந்தன. இந்தப் போட்டி, துபாயில் இன்றிரவு நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றது. நியூசிலாந்து அணி இறுதிச் சுற்றை அடைந்திருப்பது இதுதான் முதல் முறை. இந்தப் போட்டியில் எந்த அணி வென்றாலும் அவர்களுக்கு இது முதலாவது டி-20 உலக கோப்பை யாக இருக்கும்.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, லீக் போட்டிகளில் பாகிஸ்தானுடன் மட்டும் தோல்வி அடைந்தது. பிறகு மற்ற அணிகளை வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. அந்த அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில், மிட்செல் சிறந்த பார்மில் இருக்கின்றனர்.
கேப்டன் வில்லியம்சன் நெருக்கடியான சூழலில் சிறப்பாக ஆடுபவர். ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், கிளைன் பிலிப்ஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்டுபவர்களே. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் கான்வே விலகி இருப்பது அந்த அணிக்கு சிக்கல்தான். என்றாலும் பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் சவுதி , ஆடம் மில்னே, சுழல் பந்துவீச்சாளர் ஜோதி, சன்ட்னர் பலம் சேர்க்கிறார்கள்.
ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி , தோல்வியே சந்திக்காமல் தில்லாக வந்த பாகிஸ்தானுக்கு திடுக் ஷாக் கொடுத்து அரைஇறுதியில் வென்றது, அதிரடியாக. அந்த அணியின் டேவிட் வார்னர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது பலம். மிட்செல் மார்ஷ் , மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோயினிஸ், மேத்யூ வேட் ஆகியோரும் திடீர் மிரட்டலில் திக்குமுக்காட வைப்பவர்கள் என்பதால், அந்த அணி நம்பிக்கையுடன் இருக்கிறது.
ஆடம் ஜம்பா, சுழலில் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்தி விடுகிறார். வேகப்பந்து வீச்சில், கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் தங்கள் வேகத்தை சரியாகப் பயன்படுத்து கிறார்கள். இரு அணிகளும் சமபலமாக இருப்பதால், இன்றைய போட்டி பரபரப்பாகவே இருக்கும்.
ஆனால், இந்தப் போட்டியிலும் ’டாஸ்’தான் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்கிறார்கள். துபாய் பிட்சில் 2-வது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் டாஸ் வெல்பவர்கள் முதலில் பீல்டிங்கையே தேர்வு செய்வார்கள் என்பது கிரிக்கெட் ஆர்வலர்கள் கணிப்பு. போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.









