கோடை விடுமுறை முடிந்து பள்ளி வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை பூக்கள், சாக்லேட்டுகள் கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து, மாணவிகளுடன் உரையாடிய அவர், வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது மாணவிகளிடையே பேசிய அவர், ஒவ்வொரு கல்வியாண்டும் சிறப்பாக படித்தது போல் இந்த ஆண்டும் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.







