இந்தியாவில் இருந்து முதன்முறையாக பெண் யாத்ரீகர்கள் மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முதல் விமானம் ஜெட்டா சென்றடைந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து சுமார் 145 பெண் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டது. இந்த சிறப்பு விமானத்தில் அனைத்து முக்கிய பணிகளிலும் பெண்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். விமானி கனிகா மெஹ்ரா, முதல் அதிகாரி கரிமா பாசி , பிஜிதா எம்பி, ஸ்ரீலட்சுமி, சுஷ்மா சர்மா மற்றும் சுபாங்கி பிஸ்வாஸ் ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு ஜெட்டா நகரை சென்று சேர்ந்தது. அவர்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்லா உள்ளிட்ட அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு போர்டிங் பாஸ்களையும் வழங்கினர்.
பெண் யாத்ரீகர்கள் மஹ்ரம் எனப்படும் ஆண் பாதுகாவலருடன் வர வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கும் முடிவை சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு எடுத்தது. இந்தியாவின் ஹஜ் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த முன்னோடி சிறப்பு விமான பயணம் சாத்தியமானது. நடப்பு ஆண்டில் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு 4000 பெண்யாத்ரீகர்கள் தனியாக பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.







