குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3வது முறையாக மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார்.  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,…

தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3வது முறையாக மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு முன்கூட்டியே மே 24ஆம் தேதி அணை திறக்கப்பட்டது. இந்த நிலையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீரை திறந்து வைத்தார்.

ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரின் வாயிலாக குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமான அளவில் திருப்திகரமாக இருப்பதால் உரிய தேதிக்கு முன்னதாகவே மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி , மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக 3 – வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா  பாசனத்திற்காக  தண்ணீரை திறந்து விட்டார். காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார்.

முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு  படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து, திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஜூன் 12-ல் 19 முறையாக திறப்பு

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி, அணை திறப்பதற்கு உரிய நாளான ஜூன் 12 ஆம் தேதியான இன்றுடன் 19 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக 11 முறையும், காலதாமதமாக 60 முறையும் அணை திறக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு கால வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கடந்த ஆண்டு மட்டுமே கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.