பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்குக்கு எதிராக பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ’கீட்டோ’ என்ற ’கிரவுட் பண்டிங்’ அப்ளிகேஷனை (ஆப்) பயன்படுத்தி பத்திரிகையாளர் ராணா அய்யூப் நிதி திரட்டியுள்ளார். ஆனால் திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ராணா அய்யூப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னர் அமலாக்கத்துறை ராணா அய்யூப் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது. உத்தர பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் ராணா அய்யூப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு காஸியாபாத் நீதிமன்ற வரம்புக்குள் வரவில்லை என்றும் இந்த வழக்கு விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றும் ராணா அய்யூப் சார்பின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் ஜேபி பர்திவாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராணா அய்யூப் சார்பாக ஆஜாரான விரிந்தா குரோவர், விகாஸ் சங்க்ரித்யாயன் அளித்த புகாரின் அடிப்படையில் காஸியாபாத் இந்திரபுரம் காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்பு இதை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பண பரிவர்த்தனை மும்பையில் நடைபெற்றது. அதனால் இந்த வழக்கு காஸியாபாத் நீதிமன்ற அதிகாரம் வரம்புக்குள் வரவில்லை என்று கூறினார்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்பில், உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் அய்யூபுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் காஸியாபாத் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ராணா அய்யூப் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.