முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

என்ன நடக்கிறது லட்சத்தீவில்?


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

தமிழக அரசியலில் லட்சத்தீவிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தமிழக அரசியலையும் அரசியல் காட்சிகளையும் பற்றி பேசும்போது லட்சத்தீவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எனினும் சமீப காலமாக பெரியதாக அடிபடாத லட்சத்தீவு என்ற பெயர் மீண்டும் வெளியே வரத்தொடங்கியுள்ளது. ஆனால் இம்முறை தமிழகத்தினுள் அல்ல. தமிழகத்தைத் தாண்டி வடக்கிலே ஒலிக்கத் தொடங்கி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மே 24ஆம் தேதி திங்கட்கிழமை டிவிட்டரில் #SaveLakshadweep என்ற ஹேஷ்டேக் கிட்டத்தட்ட 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்வீட்டுகளை தாண்டி இந்தியாவின் டிரெண்டில் இடம்பெற்றது. எதற்காக இந்த ஹாஷ்டாக் ஏன் டிரெண்ட் ஆகுகிறது என்று ஆய்வு செய்தபோது பின்வரும் தகவல்கள் கிடைத்தன.

விவாதமான வரைவு அறிக்கை!

2021 லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறைக்கான வரைவு அறிக்கை குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை மக்கள் தெரிவிக்க அது பொதுத் தளத்தில் வெளியிடப்பட்டது. அறிக்கை வெளியிடப்பட்ட அன்றிலிருந்து தீவில் வாழும் மக்கள் லட்சத்தீவின் நிர்வாகியான பிரஃபுல் கோடா படேல் (Praful Khoda Patel) அளித்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு யூனியன் பிரதேசம்தான் லட்சத்தீவுகள். 36 தீவுகள் இருந்தாலும் இவற்றில் வெறும் பத்து தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு மீன்பிடித்தல், சுற்றுலா தொழில் முக்கியமான வாழ்வாதாரங்களாக உள்ளன.

லட்சத்தீவுகளில் வசிக்கும் மக்களும் அரசாங்கமும் இதுவரை தங்கள் தீவைப் பாதுகாக்க பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர். தீவுகளில் மது விற்பனைக்குத் தடை, வெளிநாட்டவர்கள் லட்சத்தீவில் நிலத்தை வாங்க முடியாது, நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியின்றி தீவுகளுக்குள் செல்ல முடியாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.


இதுபோன்று பல்வேறு விதமாகப் பாதுகாத்து வந்த தீவினை தனியாரிடம் தாரை வார்த்து தருவது போல இந்த புதிய வரைவு அறிக்கை இருப்பதாக அத்தீவில் வாழும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

வளர்ச்சியா? வீழ்ச்சியா?

புதிய வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது , “நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், அதன் வசதிகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நிலம் கையகப்படுத்தல் மற்றும் மேம்பாடு தொடர்பாக கூடுதல் அதிகாரங்களை இந்த புதிய வரைவு அறிக்கை வழங்குகிறது.

“வளர்ச்சி” என்ற வரையறையின் கீழ் சுற்றுச்சூழல் ரீதியாகத் தீவுகளில் கட்டிடம், பொறியியல், சுரங்கம், குவாரி மற்றும் இதுபோன்ற பிற நடவடிக்கைகளுக்கும் இந்த கட்டுப்பாடு அனுமதிக்கிறது என தீவில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இது போன்ற விதிகள் அனைத்தும் தீவுக்குள் தனியார் பெருநிறுவனங்களை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளது என்பதே லட்சத்தீவு மக்களின் போராட்டத்திற்கான முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.

மேலும், “இந்த ஒழுங்குமுறையின் கீழ், பூங்காக்கள், தொழில்கள், குடியிருப்பு அல்லது வணிக பயன்பாடு, தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும். நிலத்தை ஆக்கிரமிக்கக் கூடிய எவரையும் வெளியேற்றுவதற்கான திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு இது அதிகாரம் அளிக்கிறது என லட்சத்தீவு மக்கள் கூறுகின்றனர். நில கையகப்படுத்தலின்போது எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை தங்களுடைய சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றவும் இந்த வரைவு அறிக்கை அனுமதியளிக்கிறது எனவும் கூறப்படுகிறது.

தீவில் வாழும் மக்களுக்கு சொந்தமான சொத்தின் சிறிய உடைமைகளை அபகரிக்க முற்படும் ‘தனியாரின் ரியல் எஸ்டேட் நலன்களுக்காகவே’ இது வரையறுக்கப் பட்டிருக்கக்கூடும் என்று அம்மக்கள் சந்தேகிக்கின்றனர். தீவில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 94.8%) பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த புதிய வரைவு அறிக்கையானது கேரளாவுடனான லட்சத்தீவின் தொடர்புகளை நலிவடையச் செய்யும் என்றும் கூறப்படுகின்றது.

லட்சத்தீவு மக்களின் குரலைக் கேளுங்கள்

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் “லட்சத்தீவின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை ஏற்க முடியாது. கேரளா லட்சத்தீவுடன் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளது. அதைத் தடுப்பதற்கான மோசமான முயற்சிகளைக் கண்டிக்கிறோம்.” என தனது ட்வீட் செய்துள்ளார்.


அதேபோல் நடிகர் பிருத்திவிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “எந்தவொரு சட்டமும், சீர்திருத்தமும் நில மக்களுக்காக இருக்க வேண்டுமே அன்றி ஒருபோதும் நிலத்திற்காக இருக்கக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒருபோதும் ஒரு நாடு, மாநிலம் அல்லது ஒரு யூனியன் பிரதேசத்தை உருவாக்கும் புவியியல் அல்லது அரசியல் அல்ல, ஆனால் அங்கு வாழும் மக்களை. பல நூற்றாண்டுகள் பழமையான அமைதியான குடியேற்றத்தின் வாழ்க்கை முறையை சீர்குலைப்பதை “முன்னேற்றம்” என்று ஏற்றுக்கொள்ள முடியாது. லட்சத்தீவு மக்களின் குரலைக் கேளுங்கள், அவர்களின் நிலத்திற்கு எது சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது பூமியின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும்.” என்று லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படேல் நிர்வாகத்தை லட்சத்தீவு மக்கள் எதிர்க்க மேலும் பல்வேறு காரணங்களும் உள்ளன. லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகி தினேஸ்வர் சர்மாவின் இறப்பிற்கு பிறகு, பிரதமர் மோடி அமைச்சரவையில் தாத்ரா மற்றும் ஹவேலியில் நிர்வாகியாக இருந்த பாஜகவை சேர்ந்த பிரபுல் கோடா படேல் யூனியான் பிரதேசத்தின் நிர்வாகியாக பொறுப்பேற்றார்.

பிரபுல் கோடா படேல்

கடந்த 2020 வரை ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நிலமாக இருந்த லட்சத்தீவு படேலின் வருகைக்கு பின் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகள் காரணமாக வெளியிலிருந்து அதிக அளவில் தீவு மக்களிடையே கொரோனா பரவ காரணம் என்று அத்தீவில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.

கால்நடை பராமரிப்புத் துறையால் இயக்கப்படும் அனைத்து பால் பண்ணைகளையும் லட்சத்தீவு நிர்வாகம் மூடிவிட்டதாம். “விலங்கு பாதுகாப்பு என்ற பெயரில் உள்ள வரைவுச் சட்டம் மாட்டிறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது வாங்குவதை தடை செய்ய விரும்புகிறது என்றும் அசைவ உணவுகளை மதிய உணவு மெனுவில் இருந்து நீக்கும்படி படேல் கூறியுள்ளதாகவும் லட்சத்தீவு மக்கள் கூறுகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய போதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரைவு அறிக்கை 2020-யின் போதும் மத்திய அரசிற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை போலவே லட்சத்தீவு விவகாரத்திற்கும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா, ஊரடங்கு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் மத்திய அரசு இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பெருவாரியாகக் கண்டன குரல்களும் எழுந்துள்ளது.

Advertisement:

Related posts

‘பல்வேறு விவகாரங்களில் பொய் பேசும் முதல்வர்’: டிடிவி தினகரன் விமர்சனம்

Ezhilarasan

இந்தியப் பயணத்திற்கு பிரிட்டன் அரசு தடை!

Karthick

”கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை”- அமைச்சர் செல்லூர் ராஜூ!

Jayapriya