பேரறிஞர் அண்ணாவின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நீதிபதி சத்தியேந்திரன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் பெரியார் திடலில் மறைந்த நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. சத்தியேந்திரன் 100 எனும் நூல் வெளியிட்டு, அவரது படத்திறப்பு நிகழ்வில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த நீதிபதி சத்தியேந்திரன் படத்தை அவரது குடும்பத்தினருடன் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். பின்னர் “நீதிபதி சத்தியேந்திரன் 100” எனும் நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது:
அண்ணாவின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் சத்தியேந்திரன். பெரியார் பயிற்சி பாசறை ஈரோட்டில் நடைபெற்று வந்த போது சத்தியேந்திரன் அங்கு சென்று பயிற்சி பெற்றார். சத்தியேந்திரன் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பெரியார் படம் இருக்கும். அப்படிப்பட்ட உறவு அவருக்கும் பெரியாருக்கும் இருந்ததால் தான் பெரியார், நீதிபதி சத்தியேந்திரனை ஊக்குவித்து கொண்டே இருந்தார்.
1944-ல் திராவிடர் என சொல்ல கூடாது, தமிழர் என்று தான் சொல்ல வேண்டும் என ஒரு கூட்டம் புறப்பட்டது. அப்போது தமிழ்நாட்டு மாநாடு என பெயர் சூட்டி, அவருக்கே தெரியாமல் மாநாடு நடத்தினார்கள். மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்தார்கள். நாம் தமிழர் தான், திராவிடர் அல்ல என தீர்மானம் கொண்டு வர முயற்சித்தார்கள். அப்போது, அந்த தீர்மானத்தை எதிர்த்து அவர்களுக்கு எதிராக சத்தியேந்திரன் குரல் கொடுத்தார். இதனால் தீர்மானம் ரத்தானது. அத்தகைய தைரியத்துடன், துணிச்சலுடன் செயல்பட்டவர் தான் சத்தியேந்திரன்.
தன்னந்தனியே இருந்து கடற்படை, தரைப்படை, ஆகாயப்படை உள்ளிட்டவற்றை காட்டுக்குள்ளே இருந்து தயாரித்த தலைவன் மேதகு தேசிய தலைவன் பிரபாகரன் தான் என்பதை இந்த பெரியார் திடலில் சொல்லாமல் நான் எங்கே சொல்வது. அப்படிப்பட்ட புலிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த வீடு நீதிபதி சத்தியேந்திரன் வீடு என்ற நன்றி உணர்வோடு, அவரது புகழ் வாழ்க வாழ்க வாழ்க என தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.