கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனக் கண்டுபிடித்துக் கருக்கலைப்பில் ஈடுபட்டவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யத் தருமபுரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் கிராமம், காமராஜர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், மருத்துவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மினி ஸ்கேன் இயந்திரம் கொண்டு கர்ப்பிணிப் பெண்களை ஏமாற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே 28-ஆம் தேதி தருமபுரி நகரக் காவல் துறையினர் சதீஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை பிடித்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் 7 பேரைப் பாலின தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார் தொடர்ந்து இதுபோன்று குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால், சதீஸ்குமாரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யத் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்திக்குப் பரிந்துரை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச்சாலை இருக்கும் சதீஷ்குமாரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.








