சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில். இந்த ஆலயத்தில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை அடுத்து பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சாமி, ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு, சிக்கரசம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டது. காலை 7 மணி அளவில் அங்கு இருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து இக்கரை நெகமம் புதூர் கிராமத்தில் அம்மன் கோவிலில் இருந்து பீனாச்சி இசையுடன் சாமி சப்பரம் புறப்பட்டபோது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து, சப்பரத்தின் முன்பு படுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது சாமி சப்பரம் ஒவ்வொருவராகத் தாண்டி சென்றது. அதனை தொடர்ந்து, வீடு வீடாக சாமி சப்பரம் சென்று அருள் பாழித்தது . சப்பரம் கிராம பகுதிக்குள் செல்லும் போது, வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனை வரவேற்று வணங்கினர்.
அதன் பின் இக்கரைநெகமம்புதூர் கிராம மக்கள் சாமியை அங்கிருந்து வழி அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து இன்று கெஞ்சனூர் மற்றும் பகுத்தம்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
– சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: