காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் தர்மாம்பாள்…

வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 11, 014 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்கம் மற்றும் ரொக்கத்தை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்ய நாதன், பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு வெப்ப அலை அதிகரித்து காணப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளை போக்குவதற்கும், அவற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்துள்ளார். வெயில் காலங்களில் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பருவநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் குப்பை கிடங்கு இல்லாத தமிழகம் என்ற நோக்கோடு, தமிழக முழுவதும் பயோ மைனிங் முறையில் குப்பைகளை சேகரிக்க நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும், ஏற்கனவே 153 இடங்களில் உள்ள குப்பை கிடங்குகள் கண்டறியப்பட்டு, அவைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 30-க்கும் மேற்பட்ட குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறைப்படி குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளிலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் குப்பை கிடங்குகள் அகற்றும் பணி முடிவடைந்து குப்பை கிடங்கு இல்லாத தமிழகமாக மாற்றப்படும். குப்பை கிடங்குகள் இருந்த இடத்தில் காடுகள் வளர்க்கும் பணியும் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மட்டுமின்றி, தமிழகத்தில் எந்த பகுதியிலும் விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் எதிரான எந்த திட்டத்தையும் தமிழக முதலமைச்சர் நிறைவேற்ற மாட்டார். நாகை மாவட்டம் பட்டினச்சேர்க்கை கிராமத்தில் சிபிசிஎல் என்னை நிறுவன குழாயில் ஏற்பட்ட கசிவு அடைக்கப்பட்டுள்ளது. அந்த குழாய்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டு அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் மெய்யானதன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.