பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. இதுவரை 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த
2017ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை வழக்குப் பதிவு செய்து சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புடைய சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கியது. இதையடுத்து 2020ஆம் ஆண்டு போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 300கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது. அதன் பிறகு சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியது.
இதனையடுத்து கடந்தாண்டு சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என 100 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்து வருமான வரித் துறையினர் நோட்டீஸ் ஓட்டிச் சென்றனர்.
இந்த நிலையில், சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்
என்ற நிறுவனம், சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில்
உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமான வரித் துறையினர் ரூ.15 கோடி மதிப்பிலான அந்த நிறுவனத்தையும் முடக்கி உள்ளனர்.








