அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அமைதியாக இருந்த சசிகலா, தற்போது தமிழ்நாடு முழுக்க ஆன்மீக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். தான் விரைவில் அதிமுகவுடன் இணைவேன் என்றும் கூறுகிறார். ஆனால், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தி.நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த நிலைமை தற்போது இல்லை. அதிமுகவில் என்னை இணைக்கமுடியாது என சொல்வதற்கு அவர்கள் யார் ? அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது” என்று கூறினார்.
அதிமுகவில் தொண்டர்களில் ஒருவருக்குத்தான் ராஜ்யசபா சீட் கொடுத்து வந்தார் ஜெயலலிதா. அது இப்போதும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்திய சசிகலா, “மாநில அரசு மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும். சண்டை போடக்கூடாது. பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பாக முதல்வரும், நிதியமைச்சரும் முடிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், “ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது தான் திமுகவின் ஓராண்டு பணி. ஏழை, எளிய மக்களுக்கு அம்மா மருந்தகம் பயன்பட்டது. அதனை நடத்த மறுக்கிறார்கள். இது போன்ற விசயங்களில் அரசியல் சாயம் பூச வேண்டாம். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அவருக்காக கொண்டு வந்ததல்ல, அது மக்களுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது, அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படவில்லை. அதனால் தான் மக்கள் என்னை அழைக்கின்றனர்” என்றும் கூறினார் சசிகலா.







