பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் படம் “சார்பட்டா பரம்பரை”. இப்படம் கடந்த 21-ம் தேதி இரவு 10 மணிக்கே அமேசானில் வெளியாகியது. பா.ரஞ்சித்தின் 5-வது படம் “சார்பட்டா பரம்பரை”. அரசியல் தெளிவுடனும், குத்துச்சண்டை பற்றிய விரிவான பார்வையுடனும் இத்திரைப்படத்தை ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.
நேர்த்தியான திரைக்கதை, வசனம்
பொதுவாக Sports தொடர்பான படங்களில், விளையாட்டு நுட்பங்களை பற்றியோ, போட்டிகளில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் பற்றியோ பெரிதாக சொல்லப்பட்டிருக்காது. அப்படி சொல்லப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடும். ஆனால் இந்த விஷயத்தில் ரஞ்சித் மிக அற்புதமாக திரைக்கதையையும், வசனங்களையும் கையாண்டிருக்கிறார். படத்தில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி சொன்ன வசனம் காண்போரை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. “பட்டாம்பூச்சி மாதிரி ரிங்குல உடம்ப லேசா வச்சிக்கனும். ஆனால் தேனீ மாதிரி ஆட்டத்தில கொட்டனும்’. இதுபோன்ற வசனங்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அழகாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு விளையாட்டு தொடர்பான படத்தை இயக்கும்போது, ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது. அதுவும் ஒரு காலகட்டத்தில் (Periodic film) நிகழும் குத்துச்சண்டை தொடர்பான கதையை எடுப்பதற்கு தெளிவான கள ஆய்வு தேவைப்படுகிறது. இதை இயக்குநர் பா.ரஞ்சித் மிகச் சிறப்பாக செய்திருப்பதால்தான் படத்தின் தரம் எதிர்பார்ப்பை மிஞ்சியிருக்கிறது.
வாத்தியார் ரங்கன் (பசுபதி), சார்பட்டா பரம்பரையின் முக்கிய குத்துச்சண்டை ஆசானாக இருக்கிறார். சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை வீரர்கள் போட்டிகளில் தோற்கடிக்கப்படுவதே அரிதாக இருந்த காலம், காலப்போக்கில் மறைந்து போகிறது. ’இடியாப்பப் பரம்பரை’யின் குத்துச்சண்டை வீரர் வேம்புலியிடம் சார்பட்டா பரம்பரை வீரர்கள் சண்டையிட்டு தொடர்ந்து தோல்வியை தழுவுகின்றனர். இந்தநிலை எப்போது மாறும் என்று வாத்தியார் ரங்கனும், இந்த பரம்பரையை ஆதரிக்கும் மக்களும் நினைக்கிறார்கள். வேம்புலியை யார் தோற்கடிப்பது என்ற குழப்பம் எழும்போது, வாத்தியாரின் மகன் வெற்றிச்செல்வன் (கலையரசன்) தான் வரவேண்டும் என்று அனைவரும் கூறினாலும், அந்த வாய்ப்பை ராமுவுக்கு (சந்தோஷ் பிரதாப்) வாத்தியார் ரங்கன் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் ராமு வாத்தியார் ரங்கனை எதிர்க்கிறார்.
துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வரும் கபிலனுக்கு (ஆர்யா) குத்துச்சண்டை மீது பெரும் காதல் இருக்கிறது. ஆனால் தனது அம்மாவிற்கு பிடிக்காது என்று அவன் குத்துச்சண்டைக்கும் செல்வதில்லை. ஒருகட்டத்தில் கபிலன் தான் வேம்புலியை எதிர்க்க வேண்டும் என்ற நிலை வருகிறது. வேம்புலியை கபிலன் வென்றானா? என்பது தான் படத்தின் கதை.
படத்தின் மையக்கதை இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் நடைபெறும் காலத்தில் நடக்கிறது. வாத்தியார் ரங்கன் கழகத்தின் உறுப்பினராக இருக்கிறார். குத்துச்சண்டையில் அரசியல் கட்சிகளின் பங்கு குறித்து, இந்தப்படம் எதார்த்தத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அவசரநிலையில் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்ற நினைவுகளை படம் நமக்கு கடத்துகிறது. முக்கியமாக படத்தின் கலை இயக்குநர் ராமலிங்கத்தை நாம் பாராட்டியாக வேண்டும். பல்லவன் பேருந்து, குத்துச்சண்டை மைதானம், சுவற்றில் ஒட்டப்பட்ட படங்களில் போஸ்டர்கள், காம்ப்ளான் விளம்பரம், ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிக்கும் செய்தியாளரின் குரல் போன்ற நுட்பமான விவரங்களை காட்சியில் இடம்பெறச் செய்திருக்கிறார். அதுபோல அக்காலத்திற்கு ஏற்ப ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் என்று அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து காட்சியமைத்துள்ளனர். மேலும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் இப்படி அனைவிரின் பணியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
படத்தின் அரசியல்
இயக்குநர் ரஞ்சித்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை தொடர்ந்து பேசி வருகிறது. அந்த வரிசையில் சார்பட்டா படத்திலும் இந்த அரசியல் பேசப்பட்டிருக்கிறது. கபிலனின் தந்தை குத்துச்சண்டை வீரராக வரக்கூடாது என்பதற்காகவே அவரை கொன்றார்கள், என டாடி என்ற கதாபாத்திரம், கபிலனிடம் கூறும் காட்சியாக இருக்கட்டும், கபிலன் போட்டியில் வெற்றியடைய விடாமல் தடுக்கும் ராமுவின் மாமா கதாபாத்திரம் பேசும் காட்சியாக இருக்கட்டும், ஒடுக்கப்பட்டவர்களின் வலியை இந்தப் படம் பேசியிருக்கிறது.
’குத்துச்சண்டையை வெள்ளைக்காரர்கள் நமக்கு ஏன் கற்றுத் தந்தார்கள் என்பதையும், சார்பட்டா பரம்பரை எப்படி உருவானது என்பதையும், வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்ற வெட்டிபெருமாள் தாத்தாவைப் பற்றியும் வாத்தியார் ரங்கன் கபிலனிடம் கூறுவார். இந்த வசனங்கள் மிகவும் ஆழமான அரசியல் பார்வை கொண்டு எழுதப்பட்டவை. மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் எபப்டி அரசியல் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள், என்பதை படம் பேசியிருக்கிறது. ரஞ்சித்தின் படத்தில் எப்போதும்போல் பயன்படுத்தப்படும் நீல நிற உடைகள், புத்தர் சிலை, அம்பேத்கர் புகைப்படம் ஆகியன இந்த திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது.
நடிகர்கள்
பசுபதிக்கு இது ஒரு come back என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கண்ணியமான குத்துச்சண்டை ஆசான் எப்படி இருப்பார் என்பதை தனது நடிப்பின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அவர் கண்களில் வெளிப்படுத்தும் அந்த வெறி, நிதானம் கலந்த பார்வை, இப்படியாக பசுபதி நடிப்பில் அசத்தியிருக்கிறார். அதுபோலவே கபிலனாக வரும் ஆர்யா, அந்த உடல்கட்டை பெற எப்படி உழைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். உண்மையான குத்துச்சண்டை வீரரைப் போலவே அற்புதமாக நடித்திருக்கிறார். அதுபோல கலையரசனும், சந்தோஷ் பிரதாப்பும் அசத்தியிருக்கின்றனர்.
பெண் கதாபாத்திரங்கள்
கபிலனினின் மனைவியாக வரும் துஷ்ரா விஜயன் பேசும் வசனங்கள், நம்மை அவர் மீதே காதல் கொள்ள வைக்கிறது. ‘போ போயி எனக்கு சாப்பாட ஊட்டிவிடு, என்ன மாமா அவன் மலை மாடு மாறி இருக்கான்’, ’அவனை ஏன் நீ அடிக்கனும்’… இதுபோன்ற வசனங்கள் நம்மை கிறங்கடித்துவிடுகிறது. முதலிரவு காட்சியில் கதாநாயகி பறை இசைக்கு ஆடுவார். ரஞ்சித் படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பெண்களை அவர்கள் உலகத்திலிருந்து பார்க்க வைக்கிறது. ‘எதுக்கு எடுத்தாலும் பரம்பரம், பரம்பரையுல எதுக்குடா மானத்த கொண்டுவந்து வைக்குறீங்க’ என்ற வசனமும் சரி, போட்டிதானே தோற்றுப்போனால் என்ன‘ என்று இயல்பாக அவர் கேட்கும் வசனங்கள் எல்லாம் கிளாசிக் வகை. அதுபோலவே குத்துச்சண்டைக்கு போக வேண்டாம் என்று கூறிய கபிலனின் அம்மா கதாபாத்திரம், தனது மகன் உடைந்து அழும்போது ’நீ சரியாகனும்னா மீண்டும் குத்துச்சண்டைக்கு போகனும்’ என்று கூறும் இடமாக இருக்கட்டும் பெண்களின் கதாபாத்திரங்களை மிக கண்ணியத்துடனும், பொறுப்புணர்வுடனும் ரஞ்சித் வடிவமைத்திருக்கிறார்.
இது நம்ம ஆட்டம்…
கபிலனுக்கும் வேம்புலிக்கும் வரும் குத்துச்சண்டை காட்சிகளில், நாமே இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு ’கபிலா அப்படிதான்… அடி… குத்து…’ என்று கத்தும் அளவுக்கு படத்தொடு நாம் ஒன்றிப்போய்விடுவோம். ’இது நம்ம ஆட்டம்… வாய்ப்பு இங்க நமக்கு அவ்வளவு சீக்கரமா கிடைக்குறது இல்லை. நீ அடிச்சு ஆடு கபிலா’ போன்ற வசனங்கள் நம்மை பூரிப்படைய வைக்கிறது. நம் அனைவருக்குள்ளும் அப்படி ஒரு கபிலன் ஒளிந்திருக்கிறான்.
-வாசுகி












