வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து வரி வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரி இழப்பீடு தொகையினை ஒன்றிய அரசிடமிருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்கு துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து வரி வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.







