சார்பட்டா திரைப்படத்தில் வரும் மாரியம்மாள் (துஷாரா) கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை திரைமொழியாக அளித்து வரும் பா.ரஞ்சித்தின் சார்பட்டா திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் கதாநாயகியாக வலம் வரும் மாரியம்மாள் கதாபாத்திரத்தை இணையவாசிகள் தற்போது கொண்டாடி வருகின்றனர். பல திரைப்படங்களில் அழுத்தமான வசனங்களை கதாபாத்திரம் சரியாக வெளிப்படுத்தாமல் அந்த வசனம் அந்த இடத்திலேயே மடிந்து போயிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு கதைக்களத்திற்கு 100% பொருத்தமான கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிகர்களை நடிக்க வைக்கச் செய்வதுதான் இயக்குநரின் சாமர்த்தியம். அந்த வகையில் இயக்குநர் ரஞ்சித், கதைகளில் வரும் கதாபாத்திரங்களை கனகச்சிதமாக நடிக்க வைத்திருப்பார். பல திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் அந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் என்றும் நிலைத்து இருக்கும்.
தமிழில் பருத்திவீரனில் பிரியாமணி, ஆறு படத்தில் திரிஷா, ராஜாராணி படத்தில் நஸ்ரியா, உன்னாலே உன்னாலே, மெட்ராஸ், போன்ற படங்களில் கதாநாயகிகள் பேசும் வசனங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றன. அந்தவகையில், சார்பட்டா திரைப்படத்தில் மாரியம்மாள் வெளிப்படுத்தும் காதல் மொழியாகட்டும், கோபமாகட்டும் மிகவும் யதார்த்தமாக உள்ளதால், ரசிகர்களின் இதயங்களில் அப்படியே ஒட்டிக்கொள்கிறது.
முதல் இரவு காட்சியில் ஆட ஆரம்பிக்கும் குத்தாட்டத்தில் தொடங்கும் மாரியம்மாள் கதாபாத்திரம், படத்தின் கிளைமக்ஸ் வரை உயிரோட்டத்துடன் பயணிக்கிறது. கலங்கிய கபிலனை (ஆர்யா) பார்த்து சட்டென ’ஏ சீ அழுவாத.. என்னாத்துக்கு நீ அழுவுற? ஒனக்குதான் நா இருக்கேள’ என்ற வசனமாகட்டும். கபிலனிடம் பையன் வொணுமா? பொண்னு வொணுமா? என கேட்கும் போது, நீ தான் வேணும்னு கபிலன் கூறும்போது மாரியம்மாளின் கண்களில் காதல்மொழி பேசும். ’போ உட்டு போயிரு.. என்னைய பத்தியும் என் பிள்ளய பத்தியும் ஒனக்கு கவல?’ ’ஏ குணவதி உங்கப்பன் நீ பொறந்து மொத மொறைய குடிக்காம வந்துட்ருக்கான்’ ’என்னாத்துக்கு சொம்மா சொம்மா கத்துற’ என ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
தற்போது இணையவாசிகள் அவர் வரும் காட்சிகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். மாரியம்மாள் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ள நடிகை துஷாரா திண்டுக்கல் அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். பேஷன் டெக்னாலாஜி படித்த அவர், ஒருசில குறும்படங்களில் நடித்திருந்தாலும். சார்பட்டா படத்திற்கு பிறகு தற்போது அவருக்கு திரைத்துறையில் ஏறுமுகமே…!
கட்டுரையாளர்: மா. நிருபன் சக்கரவர்த்தி