தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் எப்படி உள்ளது ? பார்க்கலாம்…
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் சர்தார். இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன், லைலா, ராசி கண்ணா, முனிஸ்காந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காவல்துறை ஆய்வாளரான கார்த்தி தன்னிடம் வரும் வழக்குகளை திறமையாக முடித்து வைப்பதோடு அதன் மூலம் தன்னையும் மக்கள் மத்தியில் பிரபலமாக விளம்பரம் செய்து வருவார். இதற்கு காரணம் கார்த்தியின் தந்தை மீது சுமத்தப்பட்ட பழியை போக்கவே இப்படி தன்னை பிரபலப்படுத்தி கொண்டிருப்பார்.
இவருக்கும் வழக்கறிஞரான ராஷி கண்ணாவுக்கும் இடையே காதல் உண்டாகும். இந்நிலையில் உளவுத்துறை சம்பந்தமான கோப்பு ஒன்று திருடுபோகிறது. யார் அந்த கோப்பை திருடியது அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பதை கார்த்தி விசாரிக்க தொடங்குவார். அதே நேரத்தில் தேச துரோக வழக்கில் கைதாகி கார்த்தியின் தந்தை 32 ஆண்டுகள் சிறையில் இருப்பார். திருடப்பட்ட கோப்புகளுக்கும் சிறையில் இருக்கும் கார்த்தியின் தந்தைக்கும் என்ன சம்பந்தம் அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பது தான் சர்தார் படத்தின் கதை.
இரும்பு திரை, ஹீரோ போன்ற படங்களின் மூலம் நம்மை யோசிக்க வைத்த இயக்குநர் பி எஸ் மித்ரன் மீண்டும் சர்தார் படத்தின் மூலம் நம்மை அதிகம் யோசிக்க வைத்துள்ளார். உலகம் முழுவதும் தண்ணீருக்கு பின்னால் நடந்து வரும் உலக அரசியலையும் எதிர் காலத்தில் தண்ணீருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய வணிகம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் நம்மை சிந்திக்க வைத்துள்ளார். உளவாளிகளின் வாழ்க்கை அவர்களின் தியாகம் குறித்து நேர்த்தியான திரைக்கதையின் மூலம் விளக்கி உள்ளார் இயக்குநர் மித்ரன்.
சிறுத்தை படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள், எமோஷன் காட்சிகள் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்தையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் கார்த்தி. குறிப்பாக இந்தியாவின் உளவாளியாக அதிலும் வயதான தோற்றத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
குட்டிப்பையன் ரித்விக் பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். இந்த வயதில் இப்படி ஒரு நடிப்பா என்று நினைக்கவும் வைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லைலா தனது பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ராஷி கண்ணா, முனீஸ்காந்த் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். ரஜிஷா விஜயன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாகச் சிறப்பாக கையாண்டுள்ளனர். ஜிவி பிரகாஷ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலமாக உள்ளது. ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமிரா சண்டைக்காட்சிகளில் பரபரக்கிறது. திலிப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பை கூட்டியுள்ளன.
தண்ணீரை தனியார் மயமாக்குதல் பற்றியும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைத்து விற்பதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் உளவாளி கதையில் நுழைத்து நம்மை சிந்திக்க வைத்துள்ளார் இயக்குநர் மித்ரன். மொத்தத்தில் குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையில் சர்தார் திரைப்படம் உருவாகியுள்ளது.
-தினேஷ் உதய்







