சிங்கப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் சீடர் சாரங்கபாணியின் பெயரை குறிப்பிட்டு பேசினார். சாரங்கபாணி யார் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் சிங்கப்பூர் சென்ற அவர், அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து பேசினார். சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அப்போது அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழை தமிழே என அழைப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை. கடல் கடந்து சிங்கப்பூர் வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருப்பதாகவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ சாதியோ பிளவுபடுத்த முடியாது. தமிழர் வாழாத நாடு இந்த பூமிப்பந்தில் இல்லை என சொல்லத்தக்க அளவுக்கு பரந்து விரிந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது திராவிட இயக்கம் தான். அதற்கு காரணம் பெரியாரின் சீடர் சாரங்கபாணி” என தெரிவித்தார்.
முதலமைச்சர் குறிப்பிட்ட இந்த சாரங்கபாணி யார்..??
திராவிட இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவரான தமிழ்வேள் கோ. சாரங்கபாணி பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர் மற்றும் நேசிக்கப்பட்டவர். சாரங்கபாணி பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளாலும் சமூக சீர்த்திருத்தக் கோட்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்.
மலாயா என அப்போது அழைக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆழமாக இன்றும் வேரூன்றி பரவியுள்ளதற்கு ஆரம்பகாலப் பணிகளைச் செய்தவர்களில் சாரங்கபாணி மிக முக்கியமானவர்.







