எப்படியிருக்கிறது சந்தானத்தின் குலு குலு திரைப்படம்?

அமேசான் காட்டுப்பகுதியில் வசிக்கும் ஒரு பழங்குடி இனத்தின் மேல் படையெடுப்பு நடக்கிறது. இதனால் பெற்றோரை உற்றார் உறவினரை இழந்த குலுகுலு என்கிற கூகுள் கடலில் குதித்து தப்பி உலகின் பல்வேறு இடங்களை சுற்றிவிட்டு தமிழகத்தில்…

அமேசான் காட்டுப்பகுதியில் வசிக்கும் ஒரு பழங்குடி இனத்தின் மேல் படையெடுப்பு நடக்கிறது. இதனால் பெற்றோரை உற்றார் உறவினரை இழந்த குலுகுலு என்கிற கூகுள் கடலில் குதித்து தப்பி உலகின் பல்வேறு இடங்களை சுற்றிவிட்டு தமிழகத்தில் வந்து செட்டில் ஆகிறார். தன் இனத்தவர்களில் கூகுள் மட்டுமே எஞ்சியிருக்க தன்னுடைய தாய் மொழியை பேசக்கூட ஒரு துணை இல்லையே என்ற ஏக்கமும் அவருக்கு இருக்கிறது.‘எனக்கு ஒரு உதவி பண்றீங்களா’ என யார் கேட்டாலும் உடனே ஓடிச்சென்று உதவி செய்து அதன் விளைவாக உடலெங்கும் காயங்களையும் தழும்புகளையும் பதக்கமாக தாங்கியிருப்பார் இந்த கூகுள்.

இன்னொரு புறம் இஸ்ரோ விஞ்ஞானியாக இருக்கும் தனது தந்தைக்கு தன் மீது பாசமோ அக்கறையோ துளியும் இல்லை என்று இளைஞர் ஒருவர் ஆதங்கப்படுகிறார். தந்தைக்கு தன் மீது அக்கறை உண்டா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள நண்பர்களை வைத்தே தன்னை கடத்தி தன் தந்தையிடம் மிரட்ட திட்டம் போடுகிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே வேறொரு குழு அவரை கடத்திவிடுகிறார்கள். சூது கவ்வும் கதை போல் இருக்கிறதல்லவா? அதே போலானதொரு படம் எடுத்திருந்தால் கூட மகிழ்ச்சியுடன் கண்டுகளித்திருக்கலாம். படத்தின் பெரும்பாலான இடங்களில் காமெடி இல்லாமல் dark மட்டுமே நிரம்பியிருக்கிறது.

சூது கவ்வும் படத்தையே எடுத்துக்கொள்வோம்.. படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட யாருமே காமெடிக்கு என்று எதையுமே மெனக்கெட்டு செய்யமாட்டார்கள். படத்தில் வில்லனாக வரும் போலீஸ் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலவே நடந்துகொள்வார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே நமக்கு கெதக் என்று இருக்கும். ஆனால் 4 பேரும் அந்த போலீஸை எதிர்கொள்ளும் பல தருணங்களில் நமக்கு வயிறு வெடிக்க சிரிப்பு வந்துவிடும். குலுகுலுவிலும் ஏறத்தாழ அப்படியொரு வில்லன் வருகிறார். துப்பாக்கியை எடுத்து இஷ்டத்துக்கும் சுட்டு தள்ளுகிறார். அவருக்கு நகைச்சுவையான bgm-உம் போடப்படுகிறது. இருந்தும் சிரிப்பும் வரவில்லை, சின்ன பயமோ பதட்டமோ வரவில்லை.

ஒரு நல்ல திரைக்கதை அமைவதற்கான கதைக்களத்தையே தேர்வு செய்துள்ளார் இயக்குநர். இருந்தும் எந்த பிடிப்புமே இல்லாமல் எல்லா திசையிலும் இஷ்டத்திற்கும் பிரிந்து ஓடுகிறது திரைக்கதை. சந்தானத்தின் கதாப்பாத்திர வடிவமைப்பும் சுவாரஸியமானதாகவே இருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அதை இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். நன்றாக வடிவமைக்கப்பட்ட சந்தானம் கேரக்டரை சரியாக பயன்படுத்தவில்லை.. மற்ற கதாப்பாத்திரங்களை நன்றாகவே வடிவமைக்கவில்லை என்ற முடிவுக்கே வரமுடிகிறது.

இதற்கு முந்தைய படங்களில் பெரும்பாலும் உடன் இருக்கும் நபர்களை கலாய்த்தோ, மொக்கை செய்தோ ஆடியன்ஸை சிரிக்க வைத்திருப்பார் சந்தானம். காமெடியன் என்பதை தாண்டி தன்னை நடிகராக நிறுவும் முனைப்பில் சந்தானம் இதுபோலான முயற்சியில் ஈடுபடுவதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இப்படத்தில் பல நேரங்களில் சந்தானத்தின் மனவோட்டம் என்னவாக இருக்கிறது என்றே நம்மால் கணிக்கமுடியவில்லை. அவர் வசனமாக அதை வெளிப்படுத்தும் போது கூட உண்மையாகவே பேசுகிறாரா, இல்லை சூசகமாக கலாய்க்கிறாரா என்றே எண்ணத்தோன்றுகின்றன.

மேலும், இந்த ஒரே படத்தில் சமூகத்திற்கு தான் சொல்ல நினைக்கும் அத்தனை தத்துவங்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர். இதையெல்லாம் கட்டுப்படுத்தி திரைக்கதையை ஒரு அழகான நேர்க்கோட்டில் கோர்த்தெடுத்திருந்தால் நிச்சயம் பலராலும் ரசித்துப்பாராட்டப்பட்டிருக்கும் இப்படம். சந்தோஷ் நாராயணின் இசை பல இடங்களில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இலங்கை தமிழர்களாக வரும் ஜார்ஜ் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோரின் நகைச்சுவைகளே படத்தை காப்பாற்றுகிறது. படத்தின் இறுதி சண்டைக்காட்சிகளிலும் தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தது.இதுபோக நகைச்சுவைகளும் எட்டிப்பார்க்கத்தான் செய்கின்றன. மேலும் காதல், பிரிவு, இரண்டாம் காதல், முதிர் காதல், மொழி உரிமை பற்றி பல நெகிழ்வான காட்சிகளும் இருக்கின்றன. இதெல்லாம் நிச்சயம் சினிமாவில் விவாதிக்க வேண்டிய காட்சிப்படுத்தவேண்டிய விஷயங்கள்.

மேயாத மான், ஆடை என நல்ல நல்ல கதைக்களத்தை தேர்ந்தெடுத்து பல திறமையான கலைஞர்களுடன் கடுமையாக உழைப்பவர் இயக்குநர் ரத்னகுமார். திரைக்கதையிலும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் பல நல்ல படைப்புகளின் மூலம் மக்களை மகிழ்விக்கலாம் என்பதே நம் ஆசை. நண்பர்களுடன் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்திற்கு போனால் லேசாக என்ஜாய் செய்துவிட்டு வரலாம். நன்றி வணக்கம்!

– நியூஸ்7தமிழ் விமர்சனக்குழு

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.