சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்வுகள் தனக்கு மிகப்பெரிய மனதிருப்தியளிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், இந்திய வரலாற்றில் சிறப்பான நிகழ்வான 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். சர்வதேச அளவிலான நிகழ்ச்சி, சதுரங்கம் தோன்றிய இடமான தமிழ் மண்ணில் நடைபெறுவது நமக்கு பெருமை அளிக்கிறது. ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடு தோறும் தேசியக்கொடியேற்றும் இயக்கம் தொடங்க இருக்கிறது. அனைத்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும்.
4 ஜி சேவை 34,000 கிராமங்களுக்கு கொடுக்கப்படவுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 534 கிராமங்களுக்கு சென்று சேரவுள்ளது. சென்னை மாநகராட்சி மூலமாக சுழல்நிதி திருவிழா நடத்தப்படவுள்ளது. தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் சுயநிதி திட்டம் மூலம் 75,000 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அந்த தொகையானது அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் சூர்யா உள்ளிட்ட 10 பேருக்கு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார். தகுதியுள்ள அனைவரும் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செப்டம்பர் 17 ஆம் தேதி சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்வது நமது கடமை, அதற்காக மாபெரும் இயக்கத்தை நடத்தவுள்ளோம். பி எஸ் என் எல் இன் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் புதிய கனெக்சன்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. மெரினா கடல் பகுதியில் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி? கொடுக்கப்படுவது குறித்து தேவைகள் வரும்போது சம்பந்தப்பட்ட துறைகள் முடிவு செய்யும் என்றார். என் எல் சி நிறுவனம், மத்திய அரசின் நிறுவனம் என்ற அவ்ர, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் தகுதியானவர்கள், திறமையானவர்கள். தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் பலரும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மத்திய அரசின் தேர்வுகள் வெளிப்படையான தேர்வுகள். அனைவரும் அதிகப்படியாக கலந்துகொள்ளுங்கள். பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிச்சென்றது? குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சதுரங்க கூட்டமைப்பு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்றார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்ற அவர் ஒலிம்பியாட் சுடர் எல்லா பகுதிக்கும் செல்லும் என கூறினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா தமிழ்நாட்டிற்கு பெருமை. மேலும் தனக்கு பெரிய மன திருப்தி அளிப்பதாகவும் கூறினார்.
– இரா.நம்பிராஜன்








