சந்தானம் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, ‘பலூன்’பட இயக்குநர் சினிஷ் தயாரித்துள்ள படம், ’டிக்கிலோனா’. கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம் 3 கேரக்டர்களில் நடித்துள்ளார்.
யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா உட்பட பலர் நடித்துள்ளனர். டைம் மிஷினை வைத்து உருவாகும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் பணிகள் எப்போதோ முடிந்துவிட்டாலும் கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. அதோடு தமிழ்நாட்டில் தியேட்டர்களும் திறக்கப்படவில்லை என்பதால், இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதன் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்காக தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் கடந்த சில மாதங்களாக, திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யிலும் டிவி சேனல்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள 4 படங்கள், அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக இன்று அறிவிப்பு வெளியானது குறிப்பிட த்தக்கது.
……….








