தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார். விருது தொகையை சங்கரய்யா முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் இந்த விருதை நேரடியாக வழங்குவார். உடன் பாராட்டு சான்றிதழும், ரூ.10 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தகைசால் விருது பெரும் முதல் தமிழ் ஆளுமையாக விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கரய்யாவை நேரில் சந்தித்து விருதினை வழங்கினார். விருது தொகை ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட விருது தொகையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கப்படும் என சங்கரய்யா தெரிவித்திருந்தார். அதேபோல தற்போது விருது தொகை ரூ.10 லட்சத்தை நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மற்றும் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.








