நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தங்களுக்கு பல வருடங்களாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை, ஊதியம் குறைவாக உள்ளது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குறைகளை ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளிடம் கண்ணீருடன் தெரிவித்தனர். கடந்த பல ஆண்டுகளாக, வீட்டுமனைப் பட்டா, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகள் குறித்து பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அவர்களின் பிரச்சனைகள் குறித்து உடனடியாக கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.
மேலும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு எடுத்துரைத்து, விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஒரு சமூகப் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.







