சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து கூறி வந்த காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை நிறத்தின் அடிப்படையில் பல்வேறு நாட்டு மக்களோடு ஒப்பிட்டு, சாம் பிட்ரோடா பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும்,” இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்கள் போலவும், கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் உள்ளனர். இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அனைவரும் சகோதர சகோதரிகள்” என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, அமெரிக்காவின் மரபு வழி சொத்துவரி பற்றி இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா ஏற்கனவே பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், சாம் பிட்ரோடா மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசியது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. மேலும் இந்த இரு விவகாரங்களிலும் காங்கிரஸ் கட்சி சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது.
இதையும் படியுங்கள் : தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்லும் வீடியோ போலி! NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!
இந்த நிலையில், இன்று தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கு நான் மிகவும் கோபமாக உள்ளேன். இந்த இனவெறி மனப்பான்மையை நாங்கள் ஏற்க மாட்டோம். தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை நாம் தீர்மானிக்க முடியுமா? என் மக்களை இப்படிக் கேவலமாகப் பார்க்க, ராகுல் காந்தியை அனுமதித்தது யார்? என வினவி பல விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் கருத்து குறித்து பதில் அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்கும் வகையிலான சாம் பிட்ரோடாவின் கருத்துகள், மிகவும் துரதிஷ்டவசமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி முற்றிலும் நிராகரிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆயினும், சாம் பிட்ரோடாவின் கருத்து மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. சாம் பிட்ரோடாவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Jairam_Ramesh/status/1788199108890521997?t=IaFYhLgnaMH_UjNkWm-obA&s=08









