ரஷ்ய பல்கலைகழகங்களில் இந்திய மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு!

2024-25 ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 8000 மருத்துவ இடங்கள் வழங்கப்பட உள்ளதாக  தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் தெரிவித்துள்ளார்.  சென்னையில் உள்ள ரஷ்ய…

2024-25 ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 8000 மருத்துவ இடங்கள் வழங்கப்பட உள்ளதாக  தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய
மாணவர்கள் படிக்க தேவையான வழிகாட்டுதலை வழங்கும் வகையில் ரஷ்ய கல்வி கண்காட்சி குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

2024-25 ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8000 – க்கும் மேற்பட்ட
மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க
உள்ளன. இது கடந்த ஆண்டு 5000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த இடங்களின்
எண்ணிக்கை அதிகரிப்பு, ரஷ்யாவில் மருத்துவக் கல்விக்கான தேவை அதிகரித்து
வருவதைப் பிரதிபலிக்கிறது.

இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் அனைத்து சமீபத்திய விதிமுறைகளையும் ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விருப்பமான நாடுகளில் ரஷ்யா முதன்மையாக உள்ளது.

இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன் மே 11, 12 ஆகிய தேதிகளில்
சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும். எம்பிபிஎஸ் மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப்
படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கும்.

இந்தக் கண்காட்சி தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற உள்ளது. மே 14-ஆம் தேதி
மதுரை ரெசிடென்சி ஹோட்டலிலும், மே 15-ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும்,
மே 16-ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஹோட்டலிலும், மே 17-ஆம் தேதி கோவை தி
கிராண்ட் ரீஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி பற்றிய
கூடுதல் விவரங்களுக்கு 9282 221 221 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷ்யப்
பல்கலைக்கழகங்கள் நீண்டகாலமாக நற்பெயரை பெற்றுள்ளன. விரிவான பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், மேம்பட்ட வசதிகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் நாட்டில் மருத்துவக் கல்வியை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு வலுவான கற்றல் சூழலை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.

கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து
வருகிறார்கள். மதிப்புமிக்க, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, குறைந்த கட்டணத்தில்
கல்வி பெற எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான
இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிக்க வருகை தருகிறார்கள். 2024 செப்டம்பர் முதல் தொடங்க திட்டமிட்டுள்ள 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு தங்கள் பெற்றுள்ள தகுதி சார்ந்த சான்றுகளையும் கொண்டு வரலாம்” என தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளை போலவே ரஷ்ய அரசாங்கத்தின் வருடாந்திர உதவித் தொகை
திட்டம் வழியாக இந்த ஆண்டும் 200 இந்திய மாணவர்களுக்கு 100% உதவித்தொகை
வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.