நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய வேதாரண்ய உப்பு சத்தியாகிரக போராட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர் உப்புக்கு வரி விதித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தினர். இந்த சட்டத்தை எதிர்த்து தண்டியில் காந்தியடிகள் தலைமையிலும், வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து கடந்த 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி 100 தொண்டர்கள் தொடங்கிய பாதயாத்திரை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர் வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு வேதாரண்யம் வந்தடைந்தது.
வேதாரண்யத்தை சேர்ந்த அகஸ்தியன்பள்ளி உப்பளத்தில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அதிகாலை திட்டமிட்டபடி, உப்பு அள்ளிய ராஜாஜியை கைது செய்தனர். இதனால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்புத்துறை அலுவலகத்தில் இருக்கும் தனி அறையில் சிறை வைக்கப்பட்டார். தற்போது அந்த அறை அரசால் அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் தளபதியாக விளங்கிய வேதரத்தினம் பிள்ளை, தொண்டர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். இதனால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்த ஆங்கில அரசு, அவருக்கு சிறை தண்டனை அளித்தது. இதனால் அவர் அனைவராலும் சர்தார் என அழைக்கப்பட்டார். நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த மாபெரும் போராட்டத்தின் விளைவாக மனமிறங்கிய ஆங்கிலேயர்கள், காந்திஜீயை 2ஆம் வட்ட மேஜை மாநாட்டுக்கு அழைத்தனர்.
சொத்து பறிமுதல் செய்யப்பட்ட அனைவருக்கும் சொத்தை திருப்பி கொடுத்தால் தான் மாநாட்டுக்கு வருவேன் என்றும காந்தி ஜி கூறியிருந்தார். இதனால், அனைவருக்கும் சொத்துக்களை திருப்பி கொடுத்து, மும்பைக்கு கப்பலை கொண்டு சென்று காந்திஜிக்கு மீண்டும் ஆங்கிலேயர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால்,அவர் சர்தாரின் சொத்துக்களும் அளிக்கப்பட்டால் தான் வருவேன் என கூறியதையடுத்து, அவரின் சொத்துக்களும் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து காந்தி ஜி லண்டன் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த போராட்டம் வெற்றியடைந்ததில், வேதாரண்யம் பகுதி மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் நினைவாக, வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடமும், உப்பு அள்ளிய அகஸ்தியன்பள்ளியில் கடந்த 1950ஆம் ஆண்டில் சத்தியாகிரக நினைவு தூண் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 1950ஆம் ஆண்டிலேயே, சர்தாரின் உருவச் சிலையும் நிறுவப்பட்டது. மேலும், ஆங்கிலேயர் என தெரிந்து சவரம் செய்ய மறுத்து கடுங்காவல் தண்டனை பெற்ற தியாகி வைரப்பனுக்கும் கடந்த 1998ஆம் ஆண்டில் நினைவு தூண் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஏராளமானோர் உப்பு அள்ளி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எத்தனை சுதந்திர தினம் வந்தாலும், என்றும் உப்பு சத்தியாகிரக போராட்டம் நம் நினைவில் வாழும்…







