ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோகங்களை பிரித்து கூறும் கருவியுடன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை…

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள்
தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோகங்களை பிரித்து கூறும் கருவியுடன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை
ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத் தரம் வாய்ந்த
அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அதன்படி முதல்கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

இந்த அகழாய்வுப் பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுப் பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தவிர சங்க கால வாழ்விடப்பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு நடந்து வந்த அகழாய்வுப் பணியில் 117
ஆண்டுகளுக்கு பின்னர் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்கத்தால் ஆன நெற்றி
பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே குழியில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1
சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள் அடங்கும். இதனால் ஆய்வாளர்கள்
உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் அகழாய்வுப் பணியில் முதல் முறையாக 2 மூடிகள் கொண்ட முதுமக்கள்
தாழி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் இதுவே
முதல் முறையாகும். இந்த நிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட
முதுமக்கள் தாழிகளில் கிடைத்த எலும்புகளை ஆய்வு செய்ய புனே டெக்கான்
கல்லூரியில் இருந்து மானுடவியல் துறை ஆய்வாளர் வீனா முன்சீப் வருகை
தந்துள்ளார்.

அவர் ஆய்வுகளில் கிடைத்த எலும்புகளை ஆய்வு செய்து தங்கள் ஆய்வகத்துக்கு கொண்டு செல்ல உள்ளார். இதன் மூலம் இதன் காலத்தை கணக்கீடு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி அவரது முன்னிலையில் திறக்கப்பட்டது. அந்த முதுமக்கள் தாழியிலும் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் இருந்தது.

இதற்கிடையில் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோகப் பொருட்களை ஆய்வு செய்ய
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட
குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் லாண்டா என்ற கருவி மூலம் உலோகப்பொருளில் என்னென்ன உலோகங்கள் கலந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
4 தினங்களுக்கு முன்பு தங்கம் கிடைத்த நிலையில் தற்போது ஆய்வாளர்கள் குவிந்து
வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.