டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலைக்கு சம்மன் – சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு!

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி திமுகவை சேர்ந்த 12 பேரின் சொத்து…

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி திமுகவை சேர்ந்த 12 பேரின் சொத்து விவரம் குறித்து அண்ணாமலை தகவல் ஒன்றை வெளியிட்டார், இதில் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து விவரங்களை முதல்கட்டமாக வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை தெரிவித்த புகாருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மறுப்பு தெரிவித்தார். மேலும் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17 ஆவது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் டி.ஆர். பாலு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூலை 14ல் நேரில் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.