அண்ணல் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவி வகித்த டாக்டர் அம்பேத்கர், ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இவருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, இவரது இறப்புக்குப் பின் 1990-ல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
அவரை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.