அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வேலுமணி, விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து கடிதம் எழுதி உள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அஇஅதிமு கழகத்தில் கழக பொதுச் செயலாளராகிய நீங்கள் கழகத்தை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், இருவேறு கருத்துக்கள் காரணமாக 47 கழக சட்டமன்ற உறுப்பினர்களில், 25 கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொதுச் செயலாளர் அவர்கள், திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவை சுட்டிக்காட்டி மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கொள்கை வழியில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் TTV அவர்களுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், OPS அவர்கள் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசினப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்று TTV அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம், என்று நிராகரித்தீர்கள். 2019ல் அ.இ.அ.தி.மு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள்.
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் செய்வதாக கூறிய போதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள். அது மட்டுமில்லாது உங்களுடைய இந்த தவறான முடிவால் பல வேட்பாளர்கள் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு கோடிக்கனக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள்.
அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், ஒரு மாத காலம் அதை உறுதி செய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம், இப்படி தேடிவந்த பா.ஜ.க., பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள்.
அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையிலிருந்து மீண்டுவரமாட்டோமா ? என ஏங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்து வந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்கள், தாங்கள் தன்னிச்சையாக சுயநலத்தோடு திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், தங்களை தமிழக முதல்வராகவும், கழக பொதுச் செயலாளராகவும் அமர வைத்த கழகத்தின் மூத்த முன்னோடிகளை வெளியேற்றியும், புறக்கணித்தும், தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் முன்னெடுப்பதில் கழக முன்னோடிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதால், கழகத்தினர் கடும் வேதனையோடும், துயரத்தோடும் மாற்றுக் கட்சியில் கூட்டம் கூட்டமாக தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள்.
2026 சட்டமன்ற தோதலுக்கு பின்பு கழகம் தொடர்ந்து பலவீனப்பட்டு வரும் இந்த சூழ்நிலையிலும் சிறப்பாக கழகப் பணிகளில் செயல்பட்டு வந்த கோவை, திருப்பூர், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், தென்காசி, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள், எந்தவித காரணங்களுமின்றி கழக பொறுப்புகளிலிருந்து
விலக்கப்பட்டு புதியவர்களை நியமித்து வருவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை, இது கழகத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.
கழக பொதுச் செயலாளராகிய தாங்கள் கழக செயற்குழு, பொதுக்குழுவில் தங்களது கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்க கூடாது என்று செயற்குழு, பொதுக்குழுவில் அனைவரின் பொதுவான கருத்தை வெளிப்படுத்தவும், தங்களது செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் கழகம் எந்த நிலைக்கு தாழ்ந்தாலும் நான் சொல்லுவதை மட்டும்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கழக சட்டத்திட்டங்களுக்கு முரணாக கழகத்திலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள்.
தங்களால் நீக்கப்பட்டவர்கள் கழகம் துவங்கப்பட்ட 1972 ம் ஆண்டு முதல் கழக பணியாற்றியவர்கள் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் விசுவாசிகள், காலம் காலமாக, கழக வளர்ச்சிக்காக சிறை சென்று, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டும், கழகம் சந்தித்த அனைத்து பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவர்கள், குறிப்பாக 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தந்தும், கழக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கும் காரணமானவர்கள் ஆவார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




