ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் சவுதி அரேபியாவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய எண்ணைய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கிறது. இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் ரஷ்யா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஆசியா பங்கு சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது.
அமெரிக்க பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதிக்கும் என்பதால் வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதியில் கிடைக்கும் பிரன்ட் கச்சா எண்ணைய் விலை அதிகரித்து வருகிறது. ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 97 புள்ளி 76 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

உக்ரைன் பிரச்னை காரணமாக உலகம் முழுவதும் எண்ணைய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்வது குறையும் என்பதால் பேரல் ஒன்றுக்கு கச்சா எண்ணைய் விலையானது 100 அமெரிக்க டாலருக்கு அதிகமாக அதிகரிக்கக் கூடும் என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வதுடன் அத்தியாவசியப் பொருட்கள் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.







