உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் உச்சத்திலிருந்த நிலையில் , ரஷ்யா அதிபர் புதினுடன் நிபந்தனையுடனான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புக் கொண்டுள்ளார் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்யா இராணுவத்தைத் தயார்ப் படுத்தி வந்தது. ஆனால் அந்நாட்டின் மீது படையெடுக்கும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என்று ரஷ்யா மறுத்தே வந்தது. அதன் வெளிப்பாடாக எல்லைப் பகுதியிலிருந்த இராணுவ துருப்புக்களைக் குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இருப்பினும் உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. இந்த நிலையில் நேற்று எல்லைப் பகுதியின் செயற்கைக்கோள் படம் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. அதே போல் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள கிளர்ச்சி குழுக்கள் அப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. எல்லையில் போர் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிபர்களுடன் இமானுவேல் மேக்ரான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இருவருடனும் தனித்தனியாகப் பேச்சு வார்த்தை நடத்தினார். தொலைப்பேசி வாயிலாக நடந்த இந்த பேச்சு வார்த்தையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தடுக்கும் நடவடிக்கை குறித்து இருதரப்பிலும் பேசப்பட்டது.

இதையடுத்து ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பேசப்படும் அறிக்கைகளைத் தயாரிக்க ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ,அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் முடிவெடுக்கவுள்ளனர்.
உக்ரைன் மீதான போர் தாக்குதலை நிறுத்தும் நிபந்தனையுடன் மட்டுமே அமெரிக்கா இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. பதற்றமான போர்ச் சூழல் நிலவி வருகின்ற நிலையில், பிப்ரவரி 24ல் நடக்கும் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







