உக்ரைன் மீது ரஷ்யா நாளை போர் தொடுக்கக்கூடும் என கூறப்படும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளை ரஷ்யா குவித்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என சர்வதேச தலைவர்கள் பலரும் கணித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யா, தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே, பேச்சுவார்த்தையைவிட சிறந்த வழி வேறு இல்லை என தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்போனியோ கட்டரஸ், போர் ஏற்பட்டால் மனித உயிர்கள் சந்திக்கும் துயரம் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு ஆணைய உறுப்பு நாடுகளுடனும், ரஷ்யா மற்றும் உக்ரைனுடனும் இன்று தான் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் பதற்றத்தைத் தவிர்க்க இரு நாடுகளும் விரைவாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








