தமிழக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 19ம் தேதி பேரவையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அணைக்கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூடியதும் முதல் அமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் விதி எண் 110 – கீழ் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் பேசுவதற்கு முன்பாக நாங்கள் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. சபாநாயகர் பிறகு வாய்ப்பு தருகிறேன் என்று கூறியும் என்று கூறியும் ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே அமைச்சர் அரசு தரப்பு விளக்கத்தை அளித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “உரிமைப் பிரச்சனை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை விதியின் கீழ் உரிமைப் பிரச்சனை ஒன்றை அவையின் கவனத்திற்கு கொண்டு வர அதிமுக சார்பில் அனுமதி கோரியிருந்தோம். இதுதொடர்பாக எங்களது கொறடா பேரவைத் தலைவரின் அறையிலேயே கடிதம் வழங்கியிருந்தார். ஆனால், பூஜ்ய நேரத்தில்’ (Zero Hour) அந்த விவகாரத்தை எடுத்துக்கொள்ள பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். எங்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தினாலேயே நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
விதிகளுக்கு முரணான திருத்தம் கடந்த 19.06.2026 அன்று மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு முன்பாக, அந்தத் தீர்மானத்தின் வரைவு கடந்த 18.06.2026 அன்று உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பேரவை விதி படி, வரைவு தீர்மானத்தில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமெனில், அது முறையாக அவைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அளித்த திருத்த அறிவிப்பை விவாதத்திற்கு உட்படுத்தாமல், முதலமைச்சர் தனது பதிலுரையில் அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, தீர்மானத்தில் சேர்த்துக் கொண்டது பேரவை விதிகளுக்கு முரணானது என குற்றம்சாட்டினார். கடந்த கால முன்னுதாரணங்கள் அரசின் தனித் தீர்மானங்களில் திருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக சில நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரும் தனித் தீர்மானம், திருத்தங்களுடன் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. திருத்தம் குறித்த தகவல் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே முதலமைச்சருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு, அதற்கான பதில் முன்கூட்டியே தட்டச்சு செய்யப்பட்டு அவையில் வாசிக்கப்பட்டுள்ளது.
இது அவை உறுப்பினர்களின் உரிமையை மீறும் செயலாகும் என்றும், எதிர்க்கட்சித் தலைவரின் திருத்தம் அவையில் முறையாக முன்மொழியப்படாமலும், வாக்கெடுப்பிற்கு விடப்படாமலும் இருந்த நிலையில், திருத்தப்பட்ட தீர்மானத்தை பேரவைத் தலைவர் வாக்கெடுப்பிற்கு விட்டது விதிகளுக்கு மாறானது. தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனையும், மேகதாது பிரச்சனையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனையாகும். இனி வருங்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறாத வகையில் பேரவைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
ஜூன் 18 அன்று எங்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தை மட்டுமே அதிமுக ஆதரிக்கிறது. விதியின் கீழ் முறையாக முன்மொழியப்படாமல், இடையில் சேர்க்கப்பட்ட திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. காவேரி நதி, தமிழக மக்கள் ஜீவா நதி மீண்டும் நடுவர் மன்றம் வேண்டும் என்பது கேட்பது எதற்காக? உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது கீழ்படுகை மாநிலம் ஒப்புதல் இல்லாமல் மேல் படுகை மாநிலம் எந்த திட்டத்தையும் செயல்படுத்த கூடாது. அப்படி இருந்தும் புதிய இடைச்செருகல் தீர்மானம் ஏன் அரசு கொண்டு வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.




