RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்வித்துறை.
2021-2022ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த ஜூலை 5ல் தொடங்கியது. மொத்தமுள்ள 1.13 லட்சம் இடங்களுக்கு தொடங்கப்பட்ட ஆன்லைன் பதிவானது இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை 70,000 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதன் காரணமாக எஞ்சிய 43,000 இடங்களை நிரப்ப கூடுதலாக 10 நாட்கள் தேவை என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து இன்றுடன் முடிவடையவிருந்த ஆன்லைன் பதிவு, வரும் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தின் கோரிக்கையை ஏற்று, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.








