மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் ஏற்கப்பட்ட உறுதிமொழியில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.
தொழிலாளர் தினத்தையொட்டி சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இலவச சீருடை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிசை தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசு மாநில அரசுக்கு பாதகம் செய்வதில் தொடர்ச்சியாக உறுதியாக உள்ளதாக சாடினார். மதுரை அரசு மருத்துவ கல்லூரியில், மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி, அதை என் கவனித்திற்கு கொண்டு வராமல் அந்த மருத்துவமனை முதல்வர் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மகரிஷி சரக் சபத் பெயரில் உறுதி மொழி எடுக்க வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மகரிஷி சரக் இந்திய மருத்துவத்தின் தந்தை என மத்திய அரசு சொல்வதாகவும், அந்த உறுதி மொழியில் ஆர் எஸ் எஸ் கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வழக்கமாக அரசு மருத்துவ கல்லூரியில் எடுக்கப்படும் இப்போகிரெடிக் உறுதி மொழியை மட்டுமே எடுக்க வேண்டும் வேறு உறுதி மொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அரசு மருத்துவ கல்லூரிக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிசை தங்கபாண்டியன், உலகிலேயே விலை மதிப்பற்றது உழைப்பாளர்கள் வியர்வை தான் என கூறினார். பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தன்னம்பிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதாரணமாக உள்ளதாக கூறினார். மருத்துவ துறையில் வேறு யாராலும் இதைவிட சிறப்பாக செயல்பட முடியாது என்பது போல் மிக சிறப்பாக மா.சுப்பிரமணியன், செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.







