தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக சிறப்பு மானிய நிதியாக தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆரம்ப நிலையில் மிக சிறிய அளவில் வர்த்தக நோக்குடன் தொடங்கப்பட்டு எதிர் காலத்தில் உலக அளவில் பெரிய நிறுவனங்களுடன் வர்த்தக போட்டியிடும் அளவிற்கு திறனை உருவாக்கியுள்ளது. குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சார்பு நிறுவனங்களாக இருப்பதோடு நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக சிறப்பு மானிய நிதியாக தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தேயிலை விவசாயிகளுக்கு அளித்த விலையில் உள்ள மாறுபாடுகள், வழக்கொழிந்த எந்திர பயன்பாடு, தரமற்ற தேயிலைகளை கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல காரணங்களுக்காக தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நிதி நெருக்கடியில் தவித்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் சிறு தேயிலை தோட்ட விவசாயிகளுக்கு இந்த தொழிற்சாலைகளால் தேயிலைக்கான விலையை வழங்க இயலவில்லை. எனவே, அதிக நிலுவைத் தொகை இருப்பதால் நீலகிரியில் உள்ள அந்த விவசாயிகள் மத்தியில் அமைதியின்மை நிலவுவதாகவும் அரசானையில் குறிப்பிட்டுள்ளது. எனவே தேயிலை விலையை எதிர்கொள்ளும் வகையில் 13 தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு சிறப்பு மானியத்தை வழங்க 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Advertisement: