ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்

ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியியல் துறை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொருநை நாகரிகத்தின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு தாமிரபரணி நதிக்கரை விளங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்…

ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியியல் துறை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருநை நாகரிகத்தின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு தாமிரபரணி நதிக்கரை விளங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூா், கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக, திருநெல்வேலியில் உலகத்தரத்திலான பொருநை அருங்காட்சியம் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நடந்த மானிய கோரிக்கை விவாத்தின் போது அமைச்சர் தங்கம்தென்னரசு தொல்லியல் துறைக்கான விளக்ககுறிப்பை வெளியிட்டார். அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில்  நடத்திய தொல்லியல் ஆய்வின் போது கிடைத்த அரிய பொருட்கள் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கப்படும்.  ரூ.33.02 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என  விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருநை அருங்காட்சியகம் அமைக்க ரெட்டியார்பட்டி மலை பகுதியில் இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 13 ஏக்கா் பரப்பளவில் அருங்காட்சியகம் அமையவுள்ளது. மேலும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், வளையல்கள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரம் உள்ளிட்ட உலோகப் பொருட்கள், நாணயங்கள், பலவகை பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இங்கு அமையவுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.