கேரள மாநில சம்பவத்தின் எதிரொலியாக, மதுரை மாநகரில் உள்ள சவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கான்ஹாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். தேவநந்தாவும் அவருடைய பள்ளியில் படிக்கும் 17 பேரும் செருவத்தூர் நகரில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில் சவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டபோது, உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில், தேவநந்தா உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் கேரள மாநிலத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கேரள சம்பவத்தின் எதிரொலியாக மதுரையில் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக் கூடிய சுமார் 52 சவர்மா கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, முறையாக சுகாதாரம் பேணி காக்காத மற்றும் பழைய சிக்கன் பயன்படுத்திய ஐந்து கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. கெட்டுப்போன 10 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சிக்கன் சவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக் கூடாது. சமைத்த உணவுப் பொருடள்களை ப்ரீஸரில் வைக்கக் கூடாது. உணவுப் பொருள்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.








