தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது பேசிய அவர், ஒரு லிட்டர் எரிபொருளில் ரூ.31.50 மத்திய அரசுக்கு வரியாக செல்கிறது என தெரிவித்துள்ளார்.
“2008 – 09ம் ஆண்டில் 13.35 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2020 – 21ல் 8.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 2019 – 20ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1.89 சதவீதமாகவே இருந்தது. சரியான வரியை சரியான நபர்களிடம் எடுத்து மருத்துவம், தொழிற்சாலை என வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும். வரியின் பங்கு குறைந்து வருகிறது.”
“வரியே இல்லையென்றால் அரசு எப்படி நடைபெறும், ஜீரோ வரிவிதிப்பு என்பது அர்த்தமில்லாதது. கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்தது. அதைவிட அதிகமாக வரி வருவாய் வளர்ச்சியும் இருந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையில் 31 ரூபாய் 50 காசுகள் ஒன்றிய அரசுக்குதான் வரியாக செல்கிறது. முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.”
“கார்ப்பரேட்டுகளுக்கான வரிவருவாய் விகிதத்தை ஒன்றிய அரசு குறைத்ததால் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.1,743.30 கோடி குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், மின் வாரியத்துக்கும் உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ளன. 2021 – 22ல் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கி ரூ.20,033 கோடியாக உள்ளது. மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2008ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளார். மேலும்
“69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.55.15 நஷ்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நெருக்கடியில் போக்குவரத்துத் துறை உள்ளது.” என்றும் கூறியுள்ளார்.








