ரெட் ஜெயண்டுக்கு ரூ.2000 கோடி சொத்தா? அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு உதயநிதி விளக்கம்

ரெட் ஜெயண்ட்க்கு ரூ.2000 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்த குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், CII தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில்,…

ரெட் ஜெயண்ட்க்கு ரூ.2000 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்த
குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், CII தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தென்னிந்திய திரைப்படம் தொடர்பாக 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சுவாமிநாதன் மற்றும் திரை உலகை சார்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டர் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான்கு மாதத்திற்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால், நான் இந்த குடும்பத்தில் ஒருவராக கலந்து கொண்டிருப்பேன். நான்கு மாதம் தாமதமாக நடைபெறுவதால், நான் இங்கு அமைச்சராக கலந்துகொண்டுள்ளேன். தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்திற்காக ஆஸ்கர் வென்ற கார்த்திகி கோன்ஸ்லவுக்கு எனது வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். போகிற போக்கில் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மீது அவர் இப்படியொரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு, ரெட் ஜெயன்ட் நிறுவனத்தினுடைய மதிப்புகள் தெரியும். ஒரு படத்தை வெளியிடுவதும், தயாரிப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. திரைத்துறையில் ஒற்றுமை இல்லை. அதை நாம் முதலில் சரிசெய்ய வேண்டும். மேலும் திரைத்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சென்று அதை நிறைவேற்றி தருவேன். தமிழக அரசு திரைத்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து இயக்குனகள் ஆர்.கே.செல்வமணி, வெற்றி மாறன், நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் திரைத்துறையின் வளர்ச்சிகள் குறித்தும், இன்னும் முன்னெடுத்து செல்ல வேண்டிய நிகழ்வுகள் குறித்தும் பேசினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.