ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..!

”DMK Files 2எனும் பெயரில் அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு ரூ.50 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

”DMK Files 2எனும் பெயரில் அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு ரூ.50 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த ரஃபேல் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும், தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் அண்ணாமலையால் இந்த வாட்ச்சை எப்படி வாங்க முடிந்தது எனவும் திமுகவினர் கேள்வியெழுப்பினர்.

இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஃபேல் கைக்கடிகாரம் குறித்த பில் மற்றும் தனது வரவு செலவு கணக்கை கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டார். அதில் கேரளாவைச் சார்ந்த  சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ர ஃபேல் கடிகாரத்தை  ரூ.3 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திமுக வினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட்டார். மேலும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி வரையிலான தனது வங்கிக் கணக்கின் வரவு செலவு விவரத்தையும் வெளியிட்டார்.

DMK Files என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதும், தி.மு.க. நிர்வாகிகள் மீதும் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பினார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரின் பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும்  சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

மேலும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) வழங்க வேண்டும் எனவும் இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால் அண்ணாமலை மீது  சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்கப்படும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சட்ட நடவடிக்கைக்கு தயார் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி  சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்தித்தாள்கள் மற்றும் அனைத்து தேசிய, மாநில தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடக பக்கங்களிலும், செய்தியாளர் சந்திப்பின் அவதூறான வீடியோவை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும்  அண்ணாமலை நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக சார்பாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 50,00,00,000 (ரூபாய் ஐம்பது கோடிகள் மட்டும்) அமைச்சர் உதயநிதிக்கு பாஜக மாநிலத் தலைவர் வழங்க வேண்டும் எனவும் அவை தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு செலுத்தப்படும் என உதயநிதி அனுப்பிய நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.