மணப்பாறையில் ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வணிகவரி அலுவலரிடம் இருந்து கணக்கில் வராத 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தா நத்தத்தைச் சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் நகை பட்டறை வைத்து நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரால் செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க கடையின் பெயரில் ஜிஎஸ்டி சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணப்பாறை வணிகவரி அலுவலகத்திற்கு கடந்த ஜூன் 25-ஆம் தேதி இணையம் வழியாக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து சேசுவின் கடையை வணிகவரித் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சேசுவை அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறிய வணிகவரித்துறை அலுவலர் கோவிந்தசாமி, ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் சேசு புகார் அளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர் வழிகாட்டுதலில், சேசுவிடமிருந்து வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி ரூ.2000 லஞ்சமாக பெற்ற போது கைது செய்தனர். அவரிடம் இருந்து கணக்கில் வராத 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






