மும்பையில் ரூ.1400 கோடி மதிப்புள்ள 703 கிலோ போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 5 பேரை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பால்கர் மாவட்டத்தில் நலசோபரா பகுதியில் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் சிலரின் நடவடிக்கைகள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போதை பொருள் கடத்தலில் அவர்கள் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 703 கிலோ கிராம் எடை கொண்ட எம்.டி. வகை போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1,400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய நபர்களை பற்றி கண்டறிய தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதை பொருள்கள் எங்கிருந்து வந்தது என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு துணை காவல் ஆணையாளர் தத்தா நலவாடே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.







