தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்- அதிரடி முடிவு

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து, பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக…

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து, பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இதில் சில முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

இதன் பிறகு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய திருத்தம் செய்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மேலும் இது மதுரை கிளையின் கீழ் உள்ள மாவட்டங்களில் மட்டுமே ஆசிரியர்கள் நியமனம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது.

 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் உள்ள 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18-ம் தேதிக்குள் CEO-க்கள் ஒப்புதல் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.