புதுச்சேரியில் அபார்ட்மெண்டில் வாட்ச்மேனாக பணியாற்றி வருபவர் வீட்டுக்கு ரூ. 12 லட்சம் மின் கட்டண பில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து மின் துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி, முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். சரவணன் வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ. 800க்குள் வருவது வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங்கில் ரூ. 680 மின் கட்டணமாக வந்துள்ளது.
ஆனால், இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 என வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் முத்தியால்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்திற்குச் சென்று விவரம் கேட்டுள்ளார். அப்போது, தவறுதலாக அச்சாகியுள்ளது. இதை சரிசெய்து தரப்படும் என மின் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் அதனை சரி செய்யாமல் அவரை அலைக்கழிக்கச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-ம.பவித்ரா








