ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க 1000 கோடி ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
16 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, ஸ்டார்ட் அப் நிநறுவனங்கள் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றக் கூடிய வல்லமைபடைத்தவை என்று குறிப்பிட்டார். ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் காலப்போக்கில் காணமால் போய்விடக் கூடாது என்று வலியுறுத்தியவர், எப்போதும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கும் நமது இளைஞர்களின் சக்தியானது ஒட்டு மொத்த உலகத்துக்குமான புதிய வாய்ப்புகளை கண்டுபிடிப்பதாக இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக அழைக்கலாம் என்று குறிப்பிட்டவர், எதிர்காலத்துக்கான தொழில்நுட்பங்கள் ஆசியா எனும் பரிசோதனைக் கூடத்தில் இருந்து வரக்கூடிய தேவை எழுந்திருப்பதாகவும் கூறினார். இங்கிருந்துதான் எதிர்காலத்துக்கான தொழில்முனைவோர் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். ஸ்டார்ட்அப் இந்தியா எனும் அலை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களுக்கும் பரவ வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். ஸ்டார்ட் அப் இந்தியா விதை நிதித் திட்டம் வாயிலாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி கூறினார்.







