பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், மேற்கூரை இடிந்து விபத்து!

கனமழையால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கின் நிழல் குடை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும்…

கனமழையால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கின் நிழல் குடை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வ.உ.சி. மைதானம் இருக்கிறது. அண்ணா விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்படும் முன் இங்குதான் ஆண்டுதோறும் ஹாக்கி விளையாட்டு பிரபலமாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது. தென்மாவட்டங்களில் பல ஹாக்கி வீரர்களை உருவாக்கிய பெருமை இந்த வ.உ.சி. மைதானத்திற்கு உண்டு. பல்வேறு போட்டிகளுக்கான களமாக இருந்த இந்த வ.உ.சி. மைதானம் அண்மையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டது. மேலும், பார்வையாளர் போட்டிகளை அமர்ந்து பார்ப்பதற்கு நிழல் குடையும் அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிழற்குடை ஒரு சாதாரண மழைக்கே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருநெல்வேலியில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ கனமழை பெய்தது. திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகிய நிலையில், திடீரென்று பெய்த மழையால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், திடீரென்று பலத்த காற்றுடன் பெய்த மழையால், அண்மையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வ.உ.சி. மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் நிழல் குடை திடிரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்தது தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதோடு, மைதானத்தை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்கூரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற மேற்கூரைகளையும் ஆய்வு செய்து, விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

சுமார் ரூ.14. 95 கோடி செலவில், புனரமைக்கப்பட்ட இந்த் புதிய மைதானத்தை, கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி அன்று தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.