சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரொனால்டோ!

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த சர்வதேச வீரர்களில் ஒருவராகத் திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் தேசிய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறப் போவதாக தனது சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார். 41 வயதான ரொனால்டோ, நவம்பர் மாத சர்வதேசப் போட்டிகளுக்குப் பிறகு, தனது புகழ்பெற்ற 7-ஆம் எண் ஜெர்சியைத் திரும்ப ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு யூரோ கோப்பைப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் கேப்டனாக இருந்து, அந்த அணிக்கு முதல் பெரிய சர்வதேசக் கோப்பையை வென்று கொடுத்தார். மேலும், 2019 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் போட்டிகளிலும் போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்ல உதவினார்.

“இது எளிதான முடிவாக இருக்கவில்லை. ஏனெனில், சில முடிவுகள் மனதால் மட்டும் எடுக்கப்படுவதில்லை. அவை இதயத்தாலும் எடுக்கப்படுகின்றன” என்று ரொனால்டோ கூறியுள்ளார்.

தனது ஓய்வை அறிவிக்கும்விதமாக ரொனால்டோ தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நான் எப்போதாவது உங்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தால், எனது கோல்களில் ஏதேனும் ஒன்று உங்களை மற்றொருவரைக் கட்டிப்பிடிக்க வைத்திருந்தால், உங்கள் கவலையை மறக்கச் செய்திருந்தால் அல்லது நமது நாட்டைப் பெருமைப்படச் செய்திருந்தால், அதுவே எனக்குப் போதுமானது.”

தனது 23 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்தில் தனக்குத் துணையாக இருந்த குடும்பத்தினர், போர்ச்சுகல் நாட்டு மக்கள், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் பணியாளர்கள் அனைவருக்கும் ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.

தனது அறிவிப்பு வீடியோவுடன், “போர்ச்சுகல் எப்போதும் என்னில் ஒரு பகுதியாகவே இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ரொனால்டோ இதுவரை போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்துள்ளார். சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக சர்வதேச கோல்கள் அடித்த வீரர் என்ற இரு உலக சாதனைகளையும் அவர் தன்வசம் வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.